court

img

கேரள சட்டப் பேரவையின் நடப்பு பதவிக்காலத்திற்குள் ராஜ்யசபா தேர்தல்.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் உறுதி....

திருவனந்தபுரம்:
“கேரளத்தில் காலியாகும் 3 மாநிலங் களவை இடங்களுக்கு, நடப்பு 14-ஆவது சட்டப்பேரவையின் பதவிக் காலத்திற்கு உள்ளேயேதேர்தல் நடத்தப்படும்” என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது.கேரளத்தில் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் வஹாப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.கே. ராகேஷ், காங்கிரஸ் கட்சியின் வயலார் ரவி உள்ளிட்ட மூவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

இதையடுத்து இந்த மூன்று இடங்களுக் கும் ஏப்ரல் 12 அன்று தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், மத்தியசட்ட அமைச்சகத்தின் தலையீட்டால், திடீரெனஅந்த அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டது. இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் பின்வாங்கலின் பின்னணியில் மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, கேரள முதல்வர் பினராயி விஜயன்உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர். இது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.மாநிலங்களவைத் தேர்தலை நிறுத்திவைத்த தேர்தல் ஆணையத்திற்கு எதிராககேரள உயர் நீதிமன்றத்தில் கேரள சட்டப்பேரவையின் செயலாளர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ எஸ். சர்மா சார்பில்தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.இந்த மனுக்கள் நீதிபதி பி.வி. ஆஷாமுன்னிலையில் திங்களன்று விசாரணைக்குவந்தன. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல்குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப் படும்’ என நீதிமன்றத்தில் உறுதியளித்தார். அதனை கேட்டுக்கொண்ட நீதிமன்றம், எனினும் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், செவ்வாயன்று வழக்குமீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், “மாநிலங்களவைத் தேர்தல் செயல்முறைக்கு19 நாட்கள் தேவை. தற்போதைய உறுப்பினர்கள் ஏப்ரல் 21 அன்று ஓய்வுபெறுகிறார்கள் என்பதால், அதற்கு முன்பு ஏப்ரல் 2-ஆம் தேதிதேர்தல் நடைமுறை துவங்க வேண்டும். ஆனால், அன்றைய தினம் விடுமுறை. எனவே,இன்றோ அல்லது நாளைக்குள்ளோ அறிவிப்புவெளியாக வேண்டும்; மாறாக தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்துகிறது” என்று வாதிட்டார். சிபிஎம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.என். சுகுணபாலனும் இதே வாதங்களை முன்வைத்தார்.இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர் தீபுலால் மோகன், கேரள சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் 2வரை உள்ளதாகவும், எனவே மாநிலங்களவைத் தேர்தலுக்கு அவசரப்பட வேண்டியதில்லை என்றும் கூறியதோடு, மனுதாரர்கள் அவசரப்பட்டு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.அப்போது நீதிபதி பி.வி. ஆஷா, குறுக்கிட்டு ஏப்ரல் 6-ஆம் தேதி 15-ஆவது சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, மே 2-ஆம் தேதி முடிவுகள் வெளியாக இருப்பதை அவரிடம் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, தற்போதைய 14-ஆவது சட்டப்பேரவையின் பதவிக்காலத்திற்கு உள்ளேயே தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், எனினும் தேர்தல் தேதி குறித்து தன்னால் உடனடியாக எதையும் கூற முடியாது என்பதால்,வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.வி. ஆஷா, ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

;